பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Saturday, 19 August 2017

கார் பத்தி சில விஷயங்கள் தெரிஞ்சுப்போமே..

கார் பத்தி சில விஷயங்கள் தெரிஞ்சுப்போமே..

# ஆரம்ப காலக் கார்களில் ஸ்டியரிங் வீல் இல்லை. காரை ஓட்ட ஓட்டுநர்கள் நெம்புகோலையே பயன்படுத்தினர்.

# உலகில் தற்போது ஓடும் கார்களின் எண்ணிக்கை 100 கோடி. 1986-ல் 50 கோடிக் கார்களே ஓடிக்கொண்டிருந்தன.

# உலகில் ஒவ்வொரு நாளும் புதிதாக 1,65,000 கார்கள் உற்பத்தியாகின்றன.

# புது காரில் வரும் வாசம் உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா? அதற்காக 50 நறுமணப் பொருள்கள் கலக்கப்படுகின்றன.

# சராசரியாக ஒரு காரில் 30,000 உதிரி பாகங்கள் இருக்கின்றன. இதில் சின்னஞ்சிறிய பாகங்களும் அடக்கம்.

# பிரிட்டிஷ் போக்குவரத்து போலீஸார் எப்போதும் கைகளில் பொம்மைக் கரடிகளை வைத்திருப்பார்கள். சாலை விபத்துகளில் சிக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட அவர்கள் இதை வைத்திருக்கிறார்கள்.

# ஹெச்.பி. எனப்படும் ஹார்ஸ் பவர் என்ற அளவுக்கும், குதிரை ஓடும் அளவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஓர் இயந்திரம் ஓடும் அளவைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்ட சொல் அது, அவ்வளவுதான்.

# மும்பையைச் சேர்ந்த கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஃபாஸ்டர், 1897-ல் இந்தியாவில் முதன் முதலில் கார் வாங்கினார்.

# 1769-ல் உலகின் முதல் மோட்டார் வாகன விபத்து நடந்தது. அந்தக் கார் இப்போதும் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள தேசிய கலை, கைவினை காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

# முதன் முதலில் கார் வாங்கிய இந்தியர் ஜம்ஷெட்ஜி டாட்டா, 1901-ம் ஆண்டில் அவர் அதை வாங்கினார்.

# உலகின் முதல் எலெக்ட்ரானிக் போக்குவரத்து சிக்னல், இங்கிலாந்தில் உள்ள வோல்வர்ஹாம்ப்டனில் 1927-ல் நிறுவப்பட்டது.

# 1965-ம் ஆண்டில், ஒரே ஆண்டில் 10 லட்சம் கார்கள் விற்றது செவ்ரோலே இம்பாலா. இந்தச் சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

# ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்த கார்களில் 75 சதவீதம் இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

# சாலை நெருக்கடிகள் காரணமாக இந்தியாவில் ஓர் ஆண்டில் ரூ. 54 கோடி மதிப்புள்ள எரிபொருள் வீணாகிறது.

# ஒரு காரில் 95 கி.மீ. வேகத்தில் பயணித்தால் நிலவை அடைய 6 மாதங்கள் ஆகும். --- படித்ததில் பிடித்தது

Monday, 24 July 2017

அதிசயிக்க வைக்கும் அலாஸ்கா வளைகுடா
மத்தியதரைக் கடல் மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய இரு சமுத்திரங்களும் சந்திக்கும் இடம் இது . ஆனால் ஒன்றுடன் ஒன்று கலக்காது..

 இதற்கு பின் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால்.. இரண்டு சமுந்திரங்களுக்கும் வெவ்வேறு அடர்த்தி, உப்புத்தன்மை,வெப்பநிலை உள்ளது. இருந்த போதிலும் இரண்டு சமுதிரங்களும் கலக்க வாய்ப்பு உள்ளது ஆனால் உப்புதன்மை காரணமாக அந்த மாற்றமானது அதிகமாக வெளிப்பட வாய்ப்பில்லை, மத்தியதரைக் கடல் ஜிப்ரால்டர் நீரணை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலில் பாய்கிறது, இங்கு மத்தியதரைக் கடலின் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதாலும் அங்கு உள்ள பனிப்பாறைகள் உருகுவதாலும் இந்த அற்புதம் நிகழ்கிறது. 

Wednesday, 19 July 2017

தெரிஞ்சுப்போமே, ..

இத்தாலி நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களைத்தான் ரோமானியர்கள் என்கிறோம். ரோமானிய மொழியில் விரலுக்கு டிஜிட்டஸ் (digitus) என்று பெயர். அந்த வார்த்தைதான் இன்று நாம் பயன்படுத்துகிற டிஜிட் (digit) எனும் வார்த்தையை நமக்குப் பெற்றுத் தந்துள்ளது.

விறைப்பான விரல்கள்

2500 வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்த ரோமானியர்கள் பயன்படுத்திய எண் உருவங்கள் எல்லாம் விரல்களே. ரோமன் எண்கள் நீட்டவாக்கில் விறைத்தபடி இருக்கும் விரல்கள். காலப்போக்கில் அவற்றில் மேலேயும் கீழேயும் சிறுகோடுகள் உருவாகி உள்ளன. அவை கூட்டு எண்களாகவும் மாறி உள்ளன. அவற்றில் ஒன்று முதல் நான்கு வரையான எண் உருவங்கள் வெறும் நான்கு விரல்களாகவே ஆரம்பத்தில் இருந்தன.

விரிந்த கை

ரோமானிய எண்களில் ஐந்து எனும் எண்ணின் உருவம் ஆங்கில எழுத்தான V போல இருப்பதாக, இப்போது நாம் புரிந்துகொள்கிறோம் இருக்கும். ஆனால் உண்மையில் ஐந்து விரல்களையும் விரித்தபடி இருக்கும் கையின் கட்டைவிரலும் அதற்கு அருகில் இருக்கும் முதல்விரலும் இணைந்த உருவமாகத்தான் (அது ஆங்கில எழுத்து V போல தெரிகிறது) இருக்கிறது. ஒரு விரிந்த கையின் மொத்த விரல்களையும் குறிக்கும் உருவம்தான் அது.

இரு கைகளின் இணைவு

10 என்ற எண்ணிக்கைக்கான எண் உருவமான X என்பது இரண்டு கைகளின் இணைந்த உருவமாகவே உருவாகி உள்ளது. பெரிய எண்களை குறிக்க தங்களது மொழியின் எழுத்துக்களை ரோமானியர்கள் பயன்படுத்தினார்கள். L என்றால் 50. C என்றால் 100. D என்றால் 500. M என்றால் 1000. என்பதாக ஆரம்பகால ரோமானிய எண்கள் அமைந்தன.

ரோமானியர்கள் தங்களின் கடிகாரங்களில் பயன்படுத்திய அத்தகைய எண்களைத்தான் இன்னமும் பல கடிகாரங்களில் நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

ஐரிஷ் குடியிருப்பு :

உங்களோட தாத்தா அல்லது பாட்டி ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தங்க ஐரிஷ் நாட்டை சேர்த்தவங்களா இருந்தா போதும் நீங்க எந்த நாட்டவரா இருந்தாலும் எங்க பொறந்து வளந்திருந்தாலும் உங்களுக்கு ஐரிஷ் குடியுரிமை கிடைக்கும் .

கணினி மௌஸ் :

டொகுலாஸ் எங்கல்பர்ட் என்பவர் தான் முதன் முதல்ல மவுசை கண்டுபிடிச்சார்.இது 1973ல Xerox Alto computer system-ல தான் முதன் முதல்ல உபயோகப்படுத்தப்பட்டது .

Tuesday, 11 July 2017

பக்கத்து பக்கத்து நாடுகள் !!

ட்விட்டர் ஹேஷ்டேக்

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சோஷியல் மீடியாக்களில் இந்த ஹேஷ்டேக்ஸ்தான் பயன்படுகிறது. இந்த குறியீடு எதற்காக எல்லாம் பயன்பட்டது தெரியுமா?

1. 1960-களுக்கு முன்பு இந்த குறியீடு, எந்தவித தனிப்பட்ட பயன்பாடும் இல்லாமல்தான் உலகம் முழுக்கவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

2. பிறகு 1960-களில் இந்த குறியீடு, தொலைபேசி எண்களை குறிக்கப் பயன்பட்டது. லேண்ட்லைன் டெலிபோன்களின் டயலர்களில் கூட, இந்த குறியீட்டை நீங்கள் பார்த்திருக்கலாம். உதாரணமாக #7 என்றால், ஆங்கிலத்தில் 'Number 7' என அர்த்தம். இதற்கு பெல் ஆய்வகம் 'Octothrope' எனப் பெயரிட்டது. இதற்கு காரணம், # குறியீட்டில் இருக்கும் எட்டு முனைகள்தான்!

3. பள்ளிகளில் , கல்லூரிகளில்  C புரோகிராமை எழுதியவர்களுக்கு நிச்சயம் இந்த குறியீட்டை மறந்திருக்க முடியாது. #include எனத் துவங்கும் அந்த புரோகிராம்களில் 1978-ல்தான் பயன்படுத்தப்பட்டது. அதற்கு பின்பு பல்வேறு புரோகிராமிங் மொழிகளிலும் இதன் பயன்பாடு விரிந்தது.

4. 1993-ம் ஆண்டு முதல் Internet Relay Chat (IRC) எனப்படும் ஆன்லைன் தகவல் தொடர்பு பரிமாற்ற முறையில், குறிப்பிட்ட சில தலைப்புகளை குறிக்க இந்த குறியீடு பயன்படுத்தப்பட்டது.

5. 2007-ம் ஆண்டு இதனை ட்விட்டரில் அறிமுகம் செய்வது பற்றி அறிவித்தார் கிரிஸ் மெஸ்ஸினா.

how do you feel about using # (pound) for groups. As in #barcamp [msg]?

— Chris Messina (@chrismessina) August 23, 2007

இவர்தான் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர். இதற்கு காப்புரிமை கூட வாங்கவில்லை கிரிஸ். அதற்கு அவர் சொன்ன காரணம், 'காப்புரிமை வாங்கினால், இதனை அனைவரும் பயன்படுத்த முடியாது. எனவே காப்புரிமை என்பது 'இதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும்' என நினைக்கும் என்னுடைய நோக்கத்திற்கே எதிரானது" என்றார் கிரிஸ். இதனை பவுண்ட் குறியீடு என அழைத்தவர்கள், இதன் பிறகே ஹேஷ்டேக் என அழைத்தார்கள். இப்படித்தான் உருவானது நாம் இன்று பயன்படுத்தும் ஹேஷ்டேக்குகள்.

6.'#' குறியீட்டை ஹேஷ்டேக் என பெயரிட்டு முதன்முதலில் அழைத்தவர் ஸ்டவ் பாய்ட். 2007-ம் ஆண்டில் சான் டியாகோ நகரில் தீ விபத்து நடந்த போது, அது தொடர்பான செய்திகளை ட்விட்டரில் தேடினர் நெட்டிசன்ஸ். அப்போது அவர்களுக்கு உதவ, #sandiegofires என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி கொடுத்தார் கிரிஸ் மெஸ்ஸினா.

7. 2009-ல் ட்விட்டர் இந்த ஹேஷ்டேக்கை அதிகாரப் பூர்வமாக அறிமுகம் செய்தது. அப்போது 2009 மற்றும் 2010­ ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஈரானில் தேர்தல் நடந்த சமயம், மக்களிடையே இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தும் பழக்கமும், அதற்கேற்றபடி ட்வீட் செய்யும் வழக்கமும் அதிகரித்தது. பிறகு ட்விட்டர் 'Trending' ஆப்ஷனை கொண்டுவர பிறகு இந்த ஹேஷ்டேக் வெகுவிரைவில் பிரபலமடைந்தது.

8.ட்விட்டர்  இப்போது முழுக்க முழுக்க ஹேஷ்டேக்குகளாலேயே இயங்கி வருகிறது . சமூக விழிப்புணர்வு, கொண்டாட்டங்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள், எச்சரிக்கை, செய்தி, விளையாட்டு என இந்த ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு பிரச்சார வடிவமாகவே மாறிவிட்டது.

9. ட்விட்டர் மூலம் பிரபலம் அடைந்தாலும், ஹேஷ்டேக் ஆனது ட்விட்டரில் மட்டுமே பயன்பாட்டில் இல்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட், ரெட்டிட், வைன், விமியோ, சவுன்ட் கிளவுட், கூகுள் ப்ளஸ் என பல சமூக வலைதளங்களில் இந்த ஹேஷ்டேக்தான் ட்ரென்ட்டிங் கிங்.

10. இந்த ஹேஷ்டேக்கின் சிறப்பம்சம் இதனை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். யார் வேண்டுமானாலும் உரையாடலை, விவாதத்தை துவக்க முடியும்.

                                                       -- நன்றி சமூகவலைத்தளம் 

Monday, 3 July 2017

சேஷாத்திரி மலை -பெயர் காரணம்

திருப்பதி வெங்கடேசப்பெருமாள் ஏழு மலைகளுக்கு அதிபதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். ஏழு மலைகளைக்கொண்டு இருப்பதால், ஏழுமலை என்றும் அழைப்பார்கள். இது ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிப்பதாக ஐதீகம். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்ரி, நாராயணாத்திரி, வேங்கடாத்திரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். சேஷாத்திரி மலை, சேஷாசலம் என்று பல பெயர்களில் திருப்பதி மலையை அழைக்கின்றோம். திருப்பதிக்கு `சேஷாத்திர மலை' என்று பெயர் வந்த காரணம் ரொம்பவே சுவாரஸ்யமானது. யுகங்கள் பலவாகியும் சேஷாத்திரி மலை என்ற புகழுடன் திகழ்கின்றது.

பெயர் காரணம் :

முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஒரு வாதம் ஏற்பட்டது. ஒருவரைவிட மற்றவர் பலசாலி என அவ்விருவரும் வாதிட்டுக்கொண்டனர். அச்சமயத்தில் கடவுளின் திருநாமத்தை ஜபித்துக்கொண்டு நாரதர் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர்களின் சண்டையை அவர் கேட்டு,

'அன்பர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு சண்டை போடுகிறீர்கள். நீங்கள் இருவருமே பலசாலிகள். உங்களில் யார் மிகப் பலசாலி என்ற விஷயத்தை அறிய ஆவலானால், நான் உங்களுக்கு ஒரு உபாயம் சொல்கிறேன் கேளுங்கள்: 'ஆதிசேஷனே! நீ மேரு பர்வதத்தின் குமாரரான ஆனந்த பர்வதத்தை வலம் வருவாயாக! வாயு தேவனே! ஆதிசேஷன் வலம்கொண்ட ஆனந்தபர்வதத்தை உனது வலிமையால் அசைப்பாயாக! உன்னால் அசைக்க முடியுமானால் நீதான் பலசாலி, இல்லையேல், ஆதிசேஷன் பலசாலி” என்றார். நாரதர் சொன்ன இந்த யோசனை அவ்விருவர்களுக்கும் பிடித்தது. உடனே ஆதிசேஷன் ஆனந்த பர்வதத்தை வலமாகச் சுற்றிக் கொண்டார். வாயுதேவன் தனது வலிமையையும், முழுமையையும் காட்டி அந்தப் பர்வதத்தை அசைக்க முயன்றார்; ஆயினும் அசைக்க முடியவில்லை. இரவும் பகலுமாக புயல் காற்றாக வீசிக்கொண்டிருந்தான் வாயுதேவன். ஆதிசேஷனும் விடாப்பிடியாக இருந்து பருவதத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டான்.

Monday, 19 June 2017

வளைகாப்பு

வளைகாப்பு! கர்ப்பிணிப் பெண்களுக்குகாகச் செய்யப்படும் ஒரு சடங்கு. இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். வளைகாப்பு நிகழ்வானது பெரும்பாலும் கருவுற்ற 7-வது மாதத்தில் செய்யப்படுகிறது.

நோக்கம்:

குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படும்போது கருவுற்ற பெண்ணுக்கு ஒரு மன தைரியம் உண்டாகிறது. மேலும் வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணின் கையில் வேப்பிலைக் காப்பு கட்டுவர். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படாமல் காக்கின்றது. வளைகாப்பின்போது கையில் 'கண்ணாடி வளையல்' அணிவிக்கப்படுகிறது. அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.

மேலும் கருவில் இருக்கும் சிசுவானது உருவான 20 வாரங்களுக்குப் பின்பு கேட்கும் திறனைப் பெறுகிறது. இதனாலே வளையல் அணிவிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

நன்மைகள்:

வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதால் கருவுற்ற பெண்ணுக்கு பிரசவம் பற்றிய பயம் நீங்கி மன தைரியம் பிறக்கிறது.

இதனால் பிறக்கும் குழந்தையும் மன தைரியத்துடன் பிறக்கும்.