பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 21 ஜூலை, 2014

வேகத்தடைகளைக்கொண்டு செடிகளுக்கு நீர் ஊற்றும் தொழில்நுட்பம்


இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்குவழிச்சாலைகளின் முக்கிய சிறப்பம்சங்கள் பளபளக்கும் சாலைகளும், சாலைகளின் நடுவில் வளர்க்கப்பட்ட வண்ணமயமான பூச்செடிகளும்தான். ஆனால், பெரும்பாலும் ஆள் அரவமற்ற பகுதிகளில் அமைந்துள்ள நான்குவழிச்சாலைகளில் தண்ணீர் வசதி இருந்தாலும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதற்கு ஆளில்லை.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் நான்குவழிச்சாலைகளில் அமைந்துள்ள டோல்கேட்டுகளில் உள்ள வேகத்தடைகளைக்கொண்டு செடிகளுக்கு நீர் ஊற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர், நாகப்பட்டினம் ஈ.ஜி.எஸ். பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு இயந்திரவியல் மாணவர்கள் முகமது தௌபிக், கார்த்திகேயன், குமரேசன் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர்.

நான்குவழிச்சாலைகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள டோல்கேட்டுகளில் 4 முதல் 6 வேகத்தடைகள் அமைந்திருக்கும். இந்த வேகத்தடைகளின் மீது, வாகனங்கள் ஏறிச்செல்லும் அழுத்தத்தைக்கொண்டு இந்தத் தொழில்நுட்பம் இயங்குகிறது. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப, டோல்கேட்டுகள் எப்போதும் பிசியாக உள்ளதால், இந்தத் தொழில்நுட்பம் மூலம் 20 முதல் 25 அடி ஆழம் வரை உள்ள நீரை எடுக்க முடியும்" என்கின்றனர், இந்தக் கண்டுபிடிப்புக் குழுவினர். நான்குவழிச் சாலைகளின் நடுவில் செடிகள் அமைக்கப்பட முக்கியக் காரணம், எதிரே வரும் வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தை இவை பெருமளவில் குறைக்கும் என்பதால்தான். இதனால், பெரும்பாலான விபத்துகளையும் தவிர்க்க முடியும்.

எப்படி இது இயங்குகிறது?

நான்குவழிச்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளின் வேகத்தடைகளை தார் மூலம் அமைக்காமல், ரப்பர் மூலம் அமைத்து அதன்கீழ் ஒரு அடி ஆழத்தில் ஸ்பிரிங் போன்ற அமைப்பையும் அதன் அருகில் சாதாரண நீர் இறைக்கும் கைப்பம்பு ஒன்றையும் இணைக்க வேண்டும். வேகத்தடையின் மேல்பகுதியை நீர் இறைக்கும் பம்ப்புடன் முதல் வகை நெம்புகோல் தத்துவத்தைப் பயன்படுத்தி இணைக்க வேண்டும். வேகத்தடைகளில் மீது வாகனங்கள் ஏறி இறங்கும்போது கிடைக்கும் அழுத்தத்தினால் ஸ்பிரிங் கீழ் நோக்கித் தள்ளப்படும். ராக் அண்டு பினியன் முறை மூலம் ஸ்பிரிங்கிற்கு கிடைக்கும் நேர் இயக்குவிசை, சுழற்று இயக்கவிசையாக மாற்றப்பட்டு அருகிலிருக்கும் நீர் இறைக்கும் பம்பு இயங்கத் தொடங்கும்" என்கிறார், கண்டுபிடிப்புக் குழுவினரில் ஒருவரான கார்த்திகேயன்.

இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், உள்ளூர் சந்தைகளில் எளிதாகக் கிடைக்கும் என்பதால், ஒரு வேகத்தடையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பொருத்த 1,500 ரூபாய் மட்டுமே செலவாகும். இந்தத் தொழில்நுட்பத்திற்கு மின்சாரம் தேவையில்லை என்பதால், மின்வசதி இல்லாத சாலைப்பகுதிகளிலும் நீர் இறைக்க முடியும்.

தொடர்புக்கு: 95666 68066

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக