பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 26 மே, 2017

அக்பரும் பீர்பாலும் - பொறாமை

அரசர் அக்பரிடம், பீர்பாலுக்கு மிக்க செல்வாக்கு இருப்பதைக் கண்ட அரசவை அமைச்சர்களுக்கு மிகுந்த பொறாமையாக இருந்தது. அதனால் எப்படியாவது அரசரிடமிருந்து பீர்பாலை பிரித்துவிட வேண்டும் அல்லது ஒழத்து விட வேண்டும் என சதி திட்டம் தீட்டினார்.

இந்த திட்டம் நிறைவேற வேண்டுமானால் அரசருக்கு நெருங்கிய ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு யாரை பயன்படுத்துவது என்று யோசித்து அரசருக்கு முடி திருத்தும் ஒரு பணியாளரைத் தேர்ந்தெடுத்தனர்.

அவனுக்கு பொன்னும் – பொருளும் அளிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி அவரை சம்மதிக்க வைத்து, அதற்கான இரகசிய திட்டத்தையும் கூறி, அதனை நிறைவேற்றினால் மேலும் பொன்னும் – பொருளும் அளிப்பதாகக் கூறினார்.

ஒரு நாள் அரசருக்கு முடி திருத்தம் செய்வதற்காக நிரந்தரமாக தம்மிடமுள்ள முடித்திருத்தம் செய்யும் பணியாளருக்கு அழைப்பு வந்தது.

அரசரின் அழைப்புக்காகவே காத்திருந்த அந்த முடி திருத்தும் பணியாளர். அமைச்சர்கள் சொல்லிக் கொடுத்தபடி தம் சதித்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலானார்.

அரச பெருமானே, தங்கள் முடியும், தங்களின் தந்தையாரின் முடிக்கு நிகரான அழகு பொருந்தியது என்று தான் சொல்ல வேண்டும் என்றார் முடி திருத்துபவர்.

அவ்வளவு அழகானதா? அது எப்படி தங்களுக்குத் தெரியும் என்றார் அரசர். எனக்குத் தெரியும் அரசே, ஆனால் தாங்கள் தங்களின் தந்தையின் மீது அக்கரை காட்டுவதில்லை போல் தோன்றுகிறது. பாவம் மாமன்னரின் முடி வளர்ந்து அவருடைய கம்பீரத்தையே கெடுத்து விட்டது என்றார் முடி திருத்துபவர்.

என்ன பணியாளரே, உமக்கு புத்தி பேதலித்து விட்டதா? என்ன பேசுகிறாய்? என் தந்தை இறந்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்பது உனக்கு தெரியாதா? இறந்து போன ஒருவரை எப்படி நலம் விசாரித்து வரமுடியும்? என்றார் அவர்.

முடியும் அரசே, முடியாதது என்று எதுவும் இல்லை, தாங்கள் மனது வைத்தால் அரசே, என்றார் முடி திருத்துபவர்.

அது எப்படி சாத்தியமாகும்? என்றார் அரசர்.

எனக்கு நன்கு பழக்கப்பட்ட மந்திரவாதி ஒருவர் இருக்கிறார். அவர் உயிருடன் ஒருவரை பாடையில் வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்று சக்தியுள்ள மந்திரங்களை ஓதி உடலை எரிப்பார்.

ஆனால் தீ அந்த உடலை எரிக்காது. எரிப்பது போல் நமக்குத் தோன்றும். ஆதலால் உயிருடன் நேராக சொர்க்கத்திற்குச் சென்று நம்முடைய சொந்தக்காரரைச் சந்தித்துவிட்டு வரலாம். இதற்கு நல்ல நம்பிக்கையான ஆள் ஒருவர் இருக்க வேண்டும் என்றார் முடி திருத்துபவர்.

நீங்கள் கூறுவது போல் செய்ய நம்பிக்கைக் குரியவர் எவர் இருக்கின்றார்? என அரசரி யோசனையில் ஆழ்ந்தார்.

அரச பெருமானே, இதற்காக ஏன் யோசிக்கின்றீர்கள்? தங்களின் வாக்கை வேதமாக ஏற்று செயல்படுவதற்கு திறமையான நமது அமைச்சர் பீர்பால் இருக்கின்றாரே, அவரை விட சிறந்த நம்பிக்கைக்குரியவர்கள் எவரும் கிடையாது என்றார் முடி திருத்துபவர்.அரசருக்கு முடி திருத்துபவர் சொல்வது சரியென நினைத்து இதற்கு பீர்பால் ஏற்றவர் அவரையே அனுப்பி வைக்கலாம் என்றார் அரசர்.

மறுநாள் காலை அரசவை கூடியது பீர்பால் உட்பட எல்லா அமைச்சர்களும் வந்திருந்தனர். அரசர் பீர்பாலை அழைத்து தன் விருப்பத்தைக் கூறினார். இக்காரியத்தைச் செய்ய தங்களை விட சிறந்தவர் வேறு எவரும் இல்லை. ஆதலின் தாங்கள் சொர்க்கத்திற்குச் சென்று என் தந்தையாரின் நிலையை அறிந்து வர வேண்டும் என்றார் அரசர்.



அரசர் கூறியதைக் கேட்ட பீர்பால் அதிர்ச்சியடைந்தார். இது எதிரிகள் செய்த சதி என்பதை புரிந்து கொண்டார்.

அரசே தங்களின் ஆசையை நிறைவேற்ற கடமைப் பட்டுள்ளேன். அதற்குள் என் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய சில முக்கியமான கடமைகள் உள்ளன. அதனை செய்து முடிக்க மூன்று மாதங்கள் அவகாசம் வேண்டும். அது வரை தங்களை சந்திக்க இயலாது எனது கடமைகள் முடிந்து மூன்றாவது மாதம் நான் வந்து தாங்கள் கூறம் சொர்க்கத்திற்குச் செல்கிறேன் என்றார் பீர்பால்.

அரசர் பீர்பாலுக்கு சம்மதமளித்தார்.

பீர்பால் அரசவைக்கு வராமல் அரசர் கூறும் காரியத்தை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொணடிருந்தார். பின்னர் அதற்கான வேலையில் ஈடுபட்டு சுடுகாட்டிலிருந்து ஒரு பக்கத்திலுள்ள காட்டுக்கு செல்லும் வகையில் ஒரு சுரங்கப் பாதையை எவருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்து முடித்தார்.

மூன்று மாதங்கள் கழிந்ததும் பீர்பால் அரசவைக்கு வந்தார். அரசே, நான் சொர்க்கத்திற்குப் போகத் தயாராகி விட்டேன். ஆதலால் அதற்கான ஏற்பாட்டைச் செய்யச் சொல்லுங்கள் என்றார் பீர்பால்.

முடி திருத்துபவர் கூறியபடி மயானத்தில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மந்திரவாதி சக்தியுள்ள மந்திரங்களைச் சொல்லி தீயை மூட்டினான். தீ பரவி புகை சூழ்ந்தது.

புகை சூழ்ந்ததைப் பயன் படுத்தி பீர்பால் தான் அமைத்திருந்த சுரங்கப் பாதையின் வழியாகத் தப்பித்து காட்டிற்குச் சென்று இருட்டியதும் மாறுவேடம் புணைந்து தன் வீட்டிற்குச் சென்றார். அன்று முதல் பீர்பால் வீட்டிலேயே மறைந்திருந்தார்.

பீர்பால் எரிக்கப்பட்டு இறந்து விட்டார். இனி ஒரு தொல்லையும் வராது என்று பொறாமை கொண்ட அமைச்சர்கள் ஆனந்தமடைந்தனர்.

ஆறு மாதங்கள் கழிந்தது. ஒரு நாள் அரசவைக்கு ஒரு ஓலையோடு மீசையும், தாடியுமாக ஒரு துறவி வந்தார். நேராக அரசரிடம் சென்று அந்த ஓலையைக் கொடுத்து விட்டு அரசே, என்னை யார் என்று அடையாளம் தெரியவில்லையா? என்றார்.

அவர் கொடுத்த ஓலையை வாங்கிக் கொண்ட அரசர், தாங்கள் யார்? விவரமாகக் கூறினால் அடையாளம் அறிந்து கொள்ள முடியும் என்றார் அரசர்.

அரசே நான்தான் உங்கள் அன்புக்குரிய பீர்பால் சொர்க்கத்தில் தங்களின் தந்தையான மாமன்னரை சந்தித்து விட்டு வந்துள்ளேன். இப்போது தங்களிடம் கொடுத்த ஓலை தங்கள் தந்தையார் கொடுத்தனுப்பியது என்றார் பீர்பால்.

அரசர் ஓலையைப் படிக்கலானார். மகனே, எனக்கே என்னை அடையாளம் தெரியாத அளவுக்கு என் தலை முடியும் – தாடியும் நீண்டு வளர்ந்து விட்டது. இங்கு முடி திருத்துவோர் எவரும் இல்லை. அதனால் எனக்கு மிகவும் சிரமமாகவும் உள்ளது. ஆதலில் நமது அரண்மனை முடி திருத்தும் பணியாளனை அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும் என்று ஓலையில் எழுதப்பட்டிருந்தது.

அரசர் மிகவும் வருத்தப்பட்டார் எனது தந்தையான மாமன்னருக்கா இந்த நிலை? உடனடியாக முடி திருத்தும் பணியாளனை அழைத்து வாருங்கள் என கட்டளையிட்டார். அரசவைக்கு முடி திருத்தும் பணியாளன் வந்தான். நீ கூறியபடி பீர்பால் சொர்க்கத்திற்குச் சென்று என் தந்தையைச் சந்தித்து விட்டு வந்துள்ளார். அங்கு முடி திருத்த ஆள் இல்லாமையினால் முடி பெரிதாக வளர்ந்து மிகவும் சிரமப்படுகின்றார். ஆதனால் முடி திருத்தம் செய்ய உங்களை அனுப்பு வைக்கும்படி ஓலை அனுப்பியுள்ளார். அதனால் தாங்கள் நாளையே புறப்படச் தயாராக வேண்டும் என்றார் அரசர்.

முடி திருத்தும் பணியாளனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகச் செயலில் ஈடுபட்டது தவறாகி விட்டது. தன் வினை தன்னையேச் சுடும் என்பது போல் இப்போது பாதிக்கபட்டுள்ளேன் என்று எண்ணினான்.

அரசரின் கட்டளைக்குக் கீழ்படியாவிட்டால் தலை துண்டிக்கப்படும் என்று நடுங்கி அரசரின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்.

அமைச்சர்கள் பொன்னும் – பொருளும் கொடுத்து இந்த சதிச் செயலைச் செய்ய சொன்னார்கள். நான் அறிவிழந்து பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த பாதகச் செயலைச் செய்துவிட்டேன் என்று கதறி அழுதான்.

அரசருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. எப்படி உயிருடன் சொர்க்கத்திற்கு சென்று வரமுடியும். இந்த உண்மைகூட புரியாமல் தந்தையின் பாசத்தினால் தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்தார்.

இச்செயலுக்கு திட்டம் தீட்டிய அமைச்சர்களையும், இதற்கு உதவியாக இருந்த முடி திருத்தும் பணியாளனையும் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். பொறாமையினால் அமைச்சர் பதவியை இழந்து சிறை செல்லும் நிலையும் ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணி வருத்தமடைந்தனர் அமைச்சர்கள்.பொறாமை கொண்ட அமைச்சர்கள் அன்பக்குரிய பீர்பாலை கொலை செய்ய சதி செய்தார்களே என்று மனம் கலங்கிய அரசர் பீர்பாலைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக